பட்டாம்பூச்சி (butterfly)
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள்
மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புறச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பி நிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். இதற்கு ஆறு கால்கள் உள்ளன. சுவை உணர் உறுப்பு இவற்றின் கால்களில் உள்ளது. இவற்றிற்கு கண் இமைகள் இல்லை. இவைகள் கண்களைத் திறந்து வைத்தபடியே இரவு நேரங்களில் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள் உடலசைவு, நிறம், சத்தம் வாயிலாக தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றன.
பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் குயின் அலெக்ஸாண்டிரா என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் மேற்குக் குட்டிநீலம் எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும்.
முழுவளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும் உணவு தேடுவதுமாகப் பறந்து திரிந்தாலும், இனப்பெருக்கம் செய்வது அவைகளின் இன்றியமையாத வாழ்க்கைக்கூறாகும். ஆண் பூச்சியோ பெண் பூச்சியோ இணைவு விருப்பத்தை தெரிவிக்கவும் அறியவும் சில குறிப்புகளைப் பயன்படுத்துகின்றன.
இவை கண்ணால் காணக்கூடியதாகவோ மணமாக உணரக்கூடியதாகவோ இருக்கும். கண்ணால் காணக்கூடிய குறிப்புகள் (குறிகைகள், signals), தன் இறக்கைகளில் உள்ள செதில்களை அசைத்து புற ஊதாக்கதிர்களை பல்வேறு விதமாக எதிர்வுகொள்ளச் செய்கின்றன. இவ்வகைக் குறிப்புகள் மூலம் தான் ஆணா, பெண்ணா, எந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி என்பனவற்றைத் தெரிவிக்கின்றன. குறிப்புச் செய்திகள் (குறிகைகள்) சரியாக இருந்தால் அவ்வினத்தைச் சேர்ந்த எதிர்பால் (ஆண்-பெண் பால்) பூச்சி இணைய இசைவு தரும். இறக்கைகளின் செதிலில் மணம்பரப்பும் வேதியல் பொருட்களும் உண்டு. இம்மணம்பரப்பிகள் வெகுதொலைவு செல்லும் திறன் கொண்டவை. எனவே வெகு தொலைவில் உள்ள தன் இனப் பட்டாம்பூச்சியை ஈர்க்க வல்லது. பெரும்பாலான இனங்களில், ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் புணர்ந்த பின், ஆண் பூச்சி இறந்து விடுகின்றது. புணர்ந்த பின் சில மணிநேரத்திலேயே பெண்பூச்சியால் முட்டையிட இயலும். எனவே பெண் பட்டாம்பூச்சிகள் முட்டைகளையிட தகுந்த இடம் தேடிச்சென்று முட்டைகளை இடுகின்றன.
வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி
ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன.
(1) முட்டைப் பருவம், (2) புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) (3) கூட்டுப்புழு பருவம், (4) இறக்கைகளுடன் பறக்கவல்ல முழுப் பட்டாம்பூச்சி நிலை.
முட்டை பருவம்
புழுப் பருவம்
ஐந்து நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து புழுவாக வெளிவரும். உணவாக அருகில் உள்ள இலைகளை உண்கின்றன. இப்புழுக்கள் பார்ப்பதற்குப் பொதுவாக பச்சை நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருக்கும். சிலவற்றின் உடலில் வரிவரியாய் பல நிற அமைப்புகளும் கொண்டிருக்கும். சில புழுக்கள் உடலில் முடிகளுடன் இருக்கும்.இவைகளை கம்பளிப்புழுக்கள் அல்லது மயிர்க்கொட்டிகள் என்றும் கூறுவர்.
கூட்டுப்புழு
புழுவானது அந்நிலைக்கான முழு வளர்ச்சியை அடைந்தபின் சில நாட்களுக்குப் பிறகு தங்களைச் சுற்றி கூடு கட்டிக் கொள்கின்றன. இப்படியாக கூட்டுப்புழு நிலையில் அசையாமல் சில நாட்கள் இருக்கும் (சில இனங்களில் இந்நிலை ஒராண்டுக்கு மேலேயும் இருக்கும்). இந்த சமயத்தில் உடல் உறுப்புகளும் இறக்கைகளும் முளைக்கத் தொடங்குகின்றன.
வண்ணத்துப்பூச்சி
சில நாட்களுக்குப்பிறகு கூட்டிற்குள் முழு வளர்ச்சி அடைந்து கூட்டை உடைத்துக்கொண்டு முழு வண்ணத்துப்பூச்சியாக வெளிவருகின்றன. கூட்டுப்புழு நிலையில் இருந்து வெளியேறிய பட்டாம்பூச்சி ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் இறக்கையை மேலும் கீழுமாய் அடித்துப் பறக்க தயாராகிவிடும். இப்படி முழுவளர்ச்சி அடைந்த பட்டாம் பூச்சி ஓரிரு வாரங்கள் மட்டுமோ வாழுகின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.
இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் வண்ணத்துபபூச்சிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
0 Comments