வேலை அளிக்க போகும் நிறுவனங்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல் கட்டமாக, மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் எத்தகைய பணியில் சேருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஒரு பணியில் சேர்ந்த பின் அது குறித்து மறுபரிசீலனை செய்வது உங்கள் வளர்ச்சிக்கு தடைகல்லாக அமைந்து விடும். திறனறிவு, விருப்பம், அர்ப்பணிப்பு உணர்வு போன்றவற்றின் அடிப்படையில், எந்த பணியில் சேர்வது என்று தொடக்கத்திலேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துறையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக மாறி வருகிறது என்பதை உணர வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப தங்களை தரம் உயர்த்திக்கொள்ளாதவர்கள், பணியின் சுவாரஸ்யம் குறையத் தொடங்கும் போது, அதற்கேற்ப உடல் உழைப்பை வழங்க முடியாமல் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
உற்பத்தி பொருட்கள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கத் துவங்கி உள்ளனர். அதேபோன்று ஒவ்வொருவரின் தனிப்பட்ட பணியும் சர்வதேச தரத்திற்கு ஈடாக திகழ வேண்டும். எனவே கல்வி கற்கும்போதே தலைமை பண்பு, குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்ற ஆளுமை பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திறமையான செயல்பாடு முக்கியம். வெற்றிக்கு குறுக்கு வழிகள் கிடையாது. அதற்கு முயற்சிக்கவும் கூடாது. பணியில் அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையான உழைக்கும் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றின் மூலம் தான் வெற்றியை ஈட்ட முடியும். ஊழியர்கள் சிறப்பாக உழைக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு முதலாளியும் விரும்புவார்.
ஒவ்வொரு ஊழியரும் தங்களின் செயல்பாட்டையும், திறமையையும் தொடர்ந்து உயர்நிலையில் தக்க வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆய்ந்தறிந்து அதை விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும்.
திறமை, திறனறிவு, சிறப்புச் சாதனைக்கான ஊக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பினை பெறவும் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும் என்பதை ஒவ்வொருவரும் எப்போது உணர்ந்து கொள்கிறார்களோ அப்போது வேலை வாய்ப்பு உங்கள் வசமாகும்.
0 Comments